| ADDED : ஜூலை 06, 2024 04:28 AM
புதுச்சேரி: சொர்ணவாரி நெற்பயிரை வரும் 15ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசின் வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சொர்ணவாரி நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் காப்பீடு செய்து பயன் பெறலாம். இந்த திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடிய விவசாயிகளின் பங்களிப்பை மாநில அரசே செலுத்துகிறது.இந்தாண்டு, சொர்ணவாரி பட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து பயிர் செய்யும் விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலகரிடம் சொர்ணவாரி விதைப்பு சான்றிதழ் பெற வேண்டும். பிறகு தங்கள் பகுதியில் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இப்படி பதிவு செய்வதன் மூலம், ஒவ்வொரு விவசாயிக்கும் தாங்கள் காப்பீடு செய்த பயிர் விவரம், நில அளவு போன்ற வற்றின் விவரங்களை நேரடியாக சரிபார்த்து கொள்ள முடியும். பதிவு செய்வதற்கான கட்டணம் ஏதும் விவசாயிகள் சேவை மையத்தில் செலுத்த தேவையில்லை. எனவே, புதுச்சேரி மாவட்ட விவசாயிகள் நடப்பு சொர்ணவாரி பயிரை காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.