| ADDED : ஜூலை 13, 2024 05:57 AM
புதுச்சேரி: அடுத்த ஆண்டு காவல்துறையில் 350 பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 326 ஊர்காவல் படையினருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, ஊர்காவல் படையினருக்கு பணி ஆணை வழங்கி, பேசியதாவது;புதுச்சேரி மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. புதுச்சேரியில், தொழில் சாலைகள் அதிக அளவில் வரும் போது தான் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. சேதராப்பட்டு பகுதியில் தொழில்சாலைகள் வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.அரசு பொறுப்பேற்ற பின், பல துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பபடும் என அறிவித்திருந்தது. முதலில் காவல்துறையில் உள்ள ஆயிரம் காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அடுத்து ஆண்டு, 350 பேருக்கு காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பபடும்.இது போன்று, நிர்வாகத்துறையில், எல்.டி.சி., யு.டி.சி., உதவியாளர் என 256 பேருக்கு விரைவில் தேர்வுகள் நடக்க இருக்கிறது. அரசு துறையில் மூலம் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையில் உதவியாளர் பணி விரைவில் நிரப்பபடும்.மாணவர்கள் போதை பழக்கத்திற்கு போகாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும். ஊர்காவல் படையினர், காவல் துறையினருக்கு ஒத்துழைப்பாக இருக்கு வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். மக்களுக்கு நண்பர்களாக இருந்து பணியாற்றும் வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., டி.ஜ.ஜி., பிரஜேந்திரகுமார் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.