துாய்மை சேவை இருவார நலப்பணி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரி : குப்பையை அகற்ற அரசு கோடிக்கணக்கான பணம் செலவு செய்வதால், பொதுமக்கள் பொறுப்புடன் வீதிகளில் குப்பையை வீசாதீர்கள் என முதல்வர் ரங்கசாமி கேட்டு கொண்டார்.புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில், 'துாய்மையே சேவை இருவார நலப்பணி' நேற்று துவங்கி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இரு வாரமும் நகர பகுதி முழுதும் பல்வேறு துாய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.இதன் துவக்க விழா, கடற்கரை சாலையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து, துாய்மையே சேவை உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து நாடு தழுவிய ஒரு மணி நேர துாய்மை பணி மற்றும் துாய்மையே சேவை என்ற இரு வார நலப்பணியொட்டி, பொதுமக்களுக்கு துாய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத்சவுக்கான், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமை துவக்கி வைத்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'புதுச்சேரியை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால் ஆன்மிக பூமியான புதுச்சேரியை அழகாக வைத்துக் கொள்வது நமது கடமை. குப்பைகளை அகற்ற கோடிக்கணக்கில் அரசு செலவு செய்கிறது. அதனால் பொதுமக்கள் வீதியில் குப்பைகளை கொட்டாமல் துப்புரவு ஊழியர்களும் தரம் பிரித்து குப்பைகளை தர வேண்டும். துாய்மையான பாரதம் காந்தியின் கனவு. அதனை நினைவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை' என்றார்.