புகையிலை தயாரிப்பாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
சென்னை, : புகையிலை தயாரிப்பாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.திருவண்ணாமலையில் உள்ள ஒரு கடையில், உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். டில்லியில் உள்ள ஜெய்ஸ்வால் நிறுவனம் தயாரிக்கும், 'ஹான்ஸ் சாப் புகையிலை' பாக்கெட்டுகள் அந்த கடையில் இருந்தன. பரிசோதனைக் கூடத்துக்கு புகையிலை மாதிரியை அனுப்பி பரிசோதித்ததில், அதில் நிகோடின் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, பாதுகாப்பாற்ற உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்திருப்பதாக, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். தயாரிப்பு நிறுவனமான ஜெய்ஸ்வால் மற்றும் விற்பனையாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஜெய்ஸ்வால் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:உணவுக்கு உள்ளீடாக நிகோடின் கலந்த புகையிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. புகையிலை பறிமுதல் செய்யப்பட்ட பின், அதுகுறித்து தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.உற்பத்தியாகும் இடத்தில் இருந்து எப்படி அனுப்பப்படுகிறது என்பது, தயாரிப்பாளருக்கு தான் தெரியும். ஆனால், அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதனால், தயாரிப்பாளருக்கும், விற்பனையாளருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூற முடியாது.எந்த விபரங்களையும் தராமல் தயாரிப்பாளர் அமைதி காப்பது, தடை செய்யப்பட்ட மாநிலத்தில், தனது பொருள் வினியோகிக்கப்படுவது தெரியும் என்ற அனுமானத்துக்கு தான் வழி வகுக்கிறது. எனவே, தனது வழக்கை நிரூபிக்க, உரிய ஆதாரங்களை, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.