| ADDED : ஆக 12, 2024 05:02 AM
புதுச்சேரி: செல்லிப்பட்டு படுகை அணையை சீர் செய்யாததால், மழைநீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக கடந்த 1906ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு படுகை அணை கட்டப்பட்டது. அணை பராமரிப்பு இன்றி இருந்ததால் கடந்த 2011ம் ஆண்டு பெய்த கன மழைக்கு படுக்கை அணை சேதமடைந்து, உடையும் அபாயம் ஏற்பட்டது. கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர்.கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பெய்த கன மழை மற்றும் விடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்தது. பல்லாயிரம் கன அடிநீர் கடலில் கலந்து வீணானது.விவசாய சங்க பொறுப்பாளர்கள் முருகையன், ரவி கூறுகையில், செல்லிப்பட்டு படுகை அணை மூலம் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. குறைந்த ஆழத்தில் போர்வேல் தண்ணீர் கிடைத்தது.கடந்த 2011ல் உடைந்த அணையை சரியாக சீரமைக்காததால், 2021ல் முழுமையாக உடைந்தது. ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, செல்லிப்பட்டு படுகை அணையை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்' என்றார்.