| ADDED : ஜூன் 17, 2024 12:43 AM
புதுச்சேரி: காலியாக உள்ள பேராசிரியர், ஊழியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என, அரசுசொசைட்டி, தொழில்நுட்ப கல்லுாரி கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லுாரிகள் மற்றும் புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லுாரி கூட்டு நடவடிக்கை குழுவின் செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். பொது செயலாளர் பரசுராமன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார்.துணை தலைவர்கள் கிருஷ்ணன், சுஜிந்திரா, குமார், செல்வராஜி, கண்ணன், மதியழகன், மோகன்குமாரமங்கலம், சீனிவாசன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் 2004ம் ஆண்டுக்கு முன், பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், 2004க்கு பின் சேர்ந்தவகளுக்கு புதிய ஓய்வூதியமும் வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஊதிய தினத்தன்று கருவூலக இயக்குனரகத்தின் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பதவி உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்.நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பேராசிரியர் மற்றும் ஊழியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். புதுச்சேரி உயர்கல்வி கவுன்சிலின் சட்ட நெறிமுறைகளின் படி மூத்த பேராசிரியர் ஒருவரை, ரூசா உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.