| ADDED : ஜூலை 21, 2024 05:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மாதிரி மருத்துவமனையாக கட்டமைக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார். அவர் கவர்னர் மற்றும் முதல்வரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மாதிரி மருத்துவமனை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரியில் இ.எஸ்.ஐ மாதிரி மருத்துவமனை இல்லாததால் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது.உழைத்து சம்பாதித்த பணத்தை இ.எஸ்.ஐ.,க்கு பிடித்தம் செய்து கட்டிய பிறகும் இலவச சிகிச்சை கிடைக்காமல் இருப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.புதுச்சேரியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலோ, போதிய வசதியில்லாமல் இங்கு செயல்படும் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர்.இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், மகப்பேறு, எலும்பு முறிவு, தோல் வியாதி பிரிவுகளில் டாக்டர்கள் கிடையாது. அதனால் புதுச்சேரி இ.எஸ்.ஐ., மருத்துவமனையை, மாதிரி மருத்துவமனையாக கட்டமைத்தால்,உரிய உயர் சிகிச்சை லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நேரடியாக கிடைப்பதுடன் அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறுவர். நம் மாநிலத்தில் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.