அதிகாரிகளை குறை கூறி முதல்வர் தப்பிக்க பார்க்கிறார் மாஜி முதல்வர் நாராயணசாமி பாய்ச்சல்
புதுச்சேரி : பதவியை காப்பாற்ற முதல்வர், அமைச்சர்கள் வாய்மூடி டம்மி ஆட்சி நடத்துகின்றனர் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. வில்லியனுார் மற்றும் நகரப் பகுதிகளில் அதிகமாக கஞ்சா விற்கிறது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா விற்பது பிடிக்கப்பட்டால் அந்த போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியை அரசு இடமாற்றம் செய்ய வேண்டும்.2021 தேர்தல் அறிக்கையில் மூடப்பட்டுள்ள பஞ்சு ஆலைகள், சர்க்கரை ஆலைகள் திறக்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஆலைகள் திறக்கப்படவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தனியார் பங்களிப்புடன் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் என அவர் கூறுகிறார். 6 மாதங்களில் இவர்களது ஆட்சி முடிந்துவிடும். அப்படி இருக்கும்போது ஆலைகளை எப்படி திறக்க முடியும்.கவர்னர் கைலாஷ்நாதன் அரசு நிர்வாகத்தை தனது கையில் எடுத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்சியில் யார் இருந்தாலும் மக்களால் தேர்வான முதல்வர், அமைச்சர்கள் பரிந்துரைகளைத்தான் கவர்னர் ஏற்க வேண்டும்.கிரண்பேடியின் செயல்பாடுபோல் தற்போதைய கவர்னர் செயல்பாடும் உள்ளது. இது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கவர்னர் தனி அரசு நடத்துகிறார். தங்கள் பதவியையும், நாற்காலியையும் காப்பாற்ற முதல்வர், அமைச்சர்கள் வாய்மூடி டம்மி அரசு நடத்துகின்றனர்.விதிமீறி கோப்புகளை அனுப்பிவிட்டு அதிகாரிகள் மீது குறைகூறி முதல்வர் தப்பிக்க முயல்கிறார். அது தன்னைதானே குறை கூறுவதற்கு இணையாகும். எங்கள் ஆட்சியில் சி.பி.எஸ்.இ., கொண்டுவரவில்லை. இந்த ஆட்சியில் தான் கொண்டு வந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜிப்மர் மீது குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'ஜிப்மரில் பல மாநில நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு வரும் கர்ப்பிணி பெண்களை எங்கிருந்து வருகிறீர்களோ அங்கேயே பிரசவம் பார்த்துகொள்ளுங்கள் என, கூறுகின்றனர். இது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். அனைவருக்கும் சிகிச்சை தரும் பொறுப்பு ஜிப்மருக்கு உண்டு' என்றார்.