| ADDED : ஆக 07, 2024 06:07 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் கேந்திரிய வித்யாலயா ஜிப்மர் பள்ளி முழு நேரமாக இயக்க வேண் டும் என, செல்வகணபதி, எம்.பி., கோரிக்கை வைத்தார்.இது குறித்து அவர், ராஜ்ய சபாவில் பேசியதாவது:புதுச்சேரியில் இரண்டு கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. ஒன்று ஜிப் மர் வளாகத்திலும், மற்றொன்று புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.ஜிப்மர் வளாகத்தில் முழு நேர அடிப்படையில் இயங்க இடம் கிடைக்காததால் ஷிப்ட் அடிப்படையில் இயங்குகிறது. இதனால், குழந்தைகளுக்கு விளையாட்டு, கூடுதல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்த நேரமில்லை. கே.வி., வழிகாட்டுதல்களின்படி, யோகா, சாரணர் போன்றவற்றில் பயிற்சி பெற வேண்டும்.நேரம் கிடைக்காததால், அவர்கள் இந்த தேவைகளை இழக்கின்றனர். முழு நேர அடிப்படையில் ஜிப்மர் பள்ளிகள் செயல்பட பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். விரிவாக்கத்திற்கான தடையாக இடம் இருந்தால், எனக்கு ஒரு ஆலோசனை உள்ளது. பள்ளியைச் சுற்றி பல ஜிப்மர் பணியாளர்கள் குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகள் பெரும்பாலாக நாற்பது ஆண்டுக்கு மேலாக பாழடைந்த நிலையில் உள்ளது.அவற்றை இடித்துவிட்டு பள்ளியை ஒட்டிய பகுதியின் ஒரு பகுதியை கே.வி.பள்ளிக்கு விரிவாக்கம் செய்து கொடுக்கலாம். இது சிக்கலை எளிதில் தீர்க்கும். மேலும் இது குழந்தைகள் ஓய்வெடுக்க போதுமான நேரத்தை வழிவகுக்கும்.எனவே, மத்திய கல்வி அமைச்சர், ஜிப்மர் நிர்வாகத்திற்கு எனது ஆலோசனைகளை ஏற்க செய்ய வேண்டும். ஷிப்ட் முறை ஒழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.