| ADDED : ஏப் 01, 2024 06:37 AM
புதுச்சேரி : மத்தியில் உள்ள கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று சென்றால் புதுச்சேரிக்கான மரியாதை கிடைக்கும் என முதல்வர் ரங்கசாமி பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் நமச்சிவாயத்தை ஆதரித்து, முத்தியால்பேட்டையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;புதுச்சேரி மத்திய அரசு நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாநிலம். அதனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று சென்றால், நமக்கான லோக்சபாவில் உரிய மரியாதை கிடைக்கும்.புதுச்சேரி மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாம் முடிவு எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகள் வைத்திலிங்கம் எம்.பி.யாக இருந்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு குரல் எழுப்பினாரா. அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. நம் ஓட்டிற்கு மரியாதை உண்டு. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். மாநில நலன் கருதி நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும். கூட்டணி அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், உட்கட்டமைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும். சட்டசபை தேர்தலில் நீங்கள் என் மீது வைத்து அளித்த ஓட்டு வீண்போகவில்லை. அதனால் தான் எல்லா திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.புதுச்சேரியை முதன்மை மாநிலமாக கொண்டுவர மத்திய அரசுடன் சேர்ந்து பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். மத்திய அரசின் உதவியை பொருத்தே மாநில வளர்ச்சி அடையும். மத்தியில் ஆளும் கட்சி எம்.பி., புதுச்சேரியில் இருந்தால் தான் மாநில வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும். அதை புதுச்சேரி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.உங்கள் ஓட்டுக்களை சரியான நேரத்தில் சரியான நபருக்கு அளிக்க வேண்டும். வேறு ஒருவருக்கு அளிக்கும் ஓட்டால் எந்தவித பயனும் இல்லை என கூறினார். பிரசாரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., செந்தில்குமரன், பா.ஜ., நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.