| ADDED : ஜூலை 14, 2024 06:15 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், நடந்த புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மகாதேவன் பேசியதாவது:உலகத்தில் ஞானத்தை வாரி வழங்கிய ஒரு சித்தாந்தம் இருந்தது எனில், அது முதலாக தோன்றிய மொழி, தமிழ் மொழி. அறத்தோடு பிணைந்து நிற்கக்கூடிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான், இந்த மண்ணை சார்ந்தவர்களுக்கு உதித்த அற்புதமான சிந்தனை.அறத்தை ஒட்டிய வாழ்க்கை என்று சொல்வது தான், பிற்காலத்தில் நீதி நிலைமை சீர் மிக்க நிலைமையாக மாற வேண்டும் என்று எழுந்த நிலைமை. அதன் பண்பட்ட வடிவங்கள் தான் நீதிமன்றங்கள்.இந்த நீதிமன்றத்தை நாடி வரும் ஒரு சாமானிய மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நீதி என்பது, காலத்தோடு கிடைக்க வேண்டிய நீதியாக மாறுமேயானால், அந்த நீதியை உருவாக்கிய, அந்த சமூகத்திற்கு அதன் பலன் சென்று சேர்ந்ததாக அர்த்தம்.தாமதிக்கப்பட்ட நீதி, ஒருக்காலும் நீதியாக கருதப்படாது. ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இருக்கக்கூடிய, வழக்குகளின் தேக்கத்தை நினைத்து பார்த்தால், மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய, இந்த ஒரு அமைப்பு, விரைவில் வேறு விதத்தில் பார்க்கப்பட வேண்டும். கால தாமதத்தை தவிர்ப்பதற்கான ஒரு முறையை நாம் விரைந்து உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.