| ADDED : ஆக 02, 2024 01:26 AM
புதுச்சேரி: கதர் கிராம தொழில் வாரிய ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி கதர்கிராம தொழில் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாரம் அலுவலகத்தில் நேற்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு குழு தலைவர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதுகுறித்து கதர்கிராம தொழில் வாரிய ஊழியர்கள் கூறும்போது, கதர் வாரியத்தின் அனைத்து சேவைகளும் கடந்த ஓராண்டாக முடங்கியுள்ளது, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள காதி நிலையங்கள் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்களை புதுச்சேரிக்கு வரவழைத்து சும்மா உட்கார வைத்துள்ளனர்.சோப்பு, மெத்தை கதர் நுால் உற்பத்தி கூடங்கள், ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்தி கூடங்களுக்கு மூலப்பொருட்கள் வாங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு காலத்தோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். கதர் கிராம வாரியத்தை மூட வேண்டும் என்று செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். அதுவரை எங்களுடைய உள்ளிருப்பு போராட்டம் தொடரும்' என்றனர்.