மொபைல் போனை தொலைத்த நேபாள பெண் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேபாள சுற்றுலாப் பயணிகள் தவறவிட்ட மொபைல்போனை, ஆட்டோ டிரைவர் பஸ்சினை மடக்கி ஒப்படைக்கும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.புதுச்சேரி, செட்டித்தெரு மிஷின் வீதி சந்திப்பில் இரட்டைமலை சீனிவாசன் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு பாஸ்கல் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய ஆட்டோவில் நேற்று நேபாளத்தை சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஏறினார். அவர், தன்னுடைய ஆப்பிள் மொபைல்போனை ஞாபக மறதியாக ஆட்டோவில் தவறவிட்டு சென்றார். இதைக்கண்ட ஆட்டோ டிரைவர், அவரை இறக்கிவிட்ட விடுதிக்குச் சென்று விசாரித்தார். அங்கு அவருடைய மற்றொரு மொபைல் எண்ணை பெற்றார்.அதை தொடர்ந்து நேபாள பெண்னை தொடர்பு கொண்டு, மொபைல்போனில் தன்னிடம் உள்ளது என தெரிவித்தார். அப்போது அந்த பெண், இ.சி.ஆர் வழியாக பஸ்சில் தான் ஊருக்கு கிளம்பி விட்டதாக கூறியுள்ளார்.அதற்கு டிரைவர் பஸ் எங்கே செல்கிறது என, கேட்டுள்ளார். முருகா தியேட்டர் சிக்னலை கடக்க இருப்பதாக பெண் தெரிவித்தார். இதையடுத்து பஸ் டிரைவரிடம் சற்று மெதுவாக செல்லும்படி கூறி ஆட்டோ டிரைவர், சக டிரைவர்களுடன் வேகமாக பஸ்சை பின்தொடர்ந்தார்.சிவாஜி சிலை அருகே பஸ்சை மடக்கி, நேபாள பெண்ணியிடம் மொபைல்போனை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை கண்ட அந்த பெண்மணி நெகிழ்ந்து போனார். ஆட்டோ டிரைவரின் நண்பர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. ஆட்டோ டிரைவர் பாஸ்கலுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.