உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாயமான கடலுார் ஆசிரியர் கொலை செய்து வீச்சு குறிஞ்சிப்பாடி வாலிபர், இளம்பெண் கைது நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றது அம்பலம்

மாயமான கடலுார் ஆசிரியர் கொலை செய்து வீச்சு குறிஞ்சிப்பாடி வாலிபர், இளம்பெண் கைது நெருங்கி பழகியதை வீடியோ எடுத்து மிரட்டியதால் கொன்றது அம்பலம்

கடலுார் : கடலுாரில் மாயமான பள்ளி ஆசிரியர், கொலை செய்து சாக்கில் மூட்டை கட்டி வீசிய இளம் பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் விக்டர்,49; கடலுார், கம்மியம்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 ஆண்டாக திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்டர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் பாத்திமாமேரி கடந்த 28ம் தேதி அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, விக்டரின் மொபைல் போனிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.அதில், ஆண்டிமடத்தை சேர்ந்த திருமணமாகாத 21 வயது இளம் பெண்ணிடம் அடிக்கடி பேசியதும், அந்த பெண் சில ஆண்டுகளாக பெற்றோருடன் குறிஞ்சிப்பாடி, எல்லைக்கல் பகுதியில் வசித்து வருவது தெரிய வந்தது.இந்நிலையில், விக்டர் வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த அந்த பெண், அயன்குறிஞ்சிப்பாடியை சேர்ந்த உறவினர் தங்கராஜ் மகன் தட்சணாமூர்த்தி,22; என்பவருடன் நேற்று முன்தினம் இரவு திருப்பாதிரிப்புலியூர் வி.ஏ.ஓ., உசேனிடம், ஆசிரியர் விக்டரை அடித்துக் கொலை செய்ததாக கூறி சரணடைந்தார்.தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், விக்டருக்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அதனை மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்திருந்த விக்டர், அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டினார்.பாதிக்கப்பட்ட பெண், உறவினரான தட்சணாமூர்த்தியிடம் கூறியுள்ளார். பின், இருவரும் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து அந்த பெண், கடந்த 18ம் தேதி விக்டரை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு மறைந்திருந்த தட்சணாமூர்த்தி, பெண்ணுடன் சேர்ந்து விக்டரை இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின், விக்டர் உடலை சாக்கில் மூட்டை கட்டி, நெய்வேலி வேலுடையான்பட்டு கோவில் அருகில் முட்புதரில் வீசியது தெரிய வந்தது.அதன்பேரில் எஸ்.பி.,ராஜாராம், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று காலை, விக்டர் உடல் வீசிய இடத்திற்கு சென்று, அங்கு, எலும்புக்கூடாக கிடந்த விக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விக்டர் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி தட்சணாமூர்த்தி மற்றும் அந்த பெண்ணை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை