| ADDED : ஆக 18, 2024 04:05 AM
காரைக்கால், : காரைக்காலில் நகர அமைப்பு குழுமத்தை ஏமாற்றி போலி ஆவணம் தயார் செய்து மோசடி செய்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நகர காவல் நிலையத்தில் நகர அமைப்பு குழும உறுப்பினர் செயலாளர் மாயவேல் கடந்த 8ம் தேதி புகார் அளித்தார். அதில், கடந்த 2021 முதல் 2024 வரை நிரவி, திருப்பட்டினம், திருநள்ளாறு மற்றும் காரைக்கால் ஆகிய துணை பதிவாளர் அலுவலகத்தில் 15 ஆவணங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.போலி ஆவணங்கள் தயாரித்து துணை பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்படாத லே அவுட்கள் மற்றும் பிளட்டுகளைப் பதிவு செய்யும் நோக்கத்தில் ஏமாற்றி அரசுக்கு 12 லட்சத்து 10 ஆயிரத்து 257 ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.அதில், காரைக்கால் திருவேட்டக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் மகன் முகேஷ், 30, என்பவர் காரைக்கால் நகரமைப்பு குழுமத்தில் அனுமதி இல்லாமல் அதற்கான தொகையை அரசு இணையதளத்தில் செலுத்தாமல் கம்ப்யூட்டர் சென்டர் மூலம் அசல் ஒருங்குமுறை ஆணையை போலியாக தயார் செய்து, காரைக்கால் நகர அமைப்பு குழுமத்தில் வழங்கியுள்ளார்.போலி கியூஆர் குறியீட்டை உருவாக்கி, பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒழுங்கு முறை ஆணை நகலை வாடிக்கையாளர்களுக்கு உண்மையான ஆவணம் போல் வழங்கியது தெரியவந்தது.இவ்வழக்கில் முகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இதில், தொடர்புடைய வழக்கறிஞர் காரைக்கால் நகர்பகுதியை சேர்ந்த கார்த்தி, 45, என்பவரை நேற்று முன்தினம் நகர போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.