| ADDED : ஜூலை 14, 2024 06:03 AM
புதுச்சேரி, : உப்பளம் துறைமுகத்தை துார்வாரும் பணிக்காக, சென்னை ஐ.ஐ.டி., துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தினர் நவீன கருவிகளுடன் ஆய்வில் ஈடுபட்டனர்.புதுச்சேரியின் பிரதான துறைமுகமாக உள்ள உப்பளம் துறைமுகத்தில், முகத்துவாரம் துவங்கி, படகு நிறுத்தும் தளம் வரை பல இடங்களில் மணல் துார்ந்து உள்ளது. இதனால் சிறிய ரக கப்பல்கள் வந்து செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.நீரோட்டம் அதிகம் இருக்கும் போது துறைமுகம் வந்த ஹோப் செவன் மினி கப்பல், நீரோட்டம் குறைந்த நேரத்தில் திரும்பி செல்லும் போது சேற்றில் சிக்கியது. இதனால், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் மூலம் ஒரு லட்சம் கியூபிக் மீட்டருக்கு புதுச்சேரி துறைமுகத்துறை துார்வார திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.அதனையொட்டி கடந்த மூன்று நாட்களாக சென்னை ஐ.ஐ.டி., துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தினர் ஆழம் கண்டறியும் கருவி எக்கோ சவுண்டர், மற்றும் ஜியோமேக்ஸ் சிக்னல் கருவிகளுடன் ஆற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.இதில், ஆறு மீட்டருக்கு குறைவாக ஆழமுள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளனர். ஆய்விற்கு இடைஞ்சலாக படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் ஆய்வாளர்கள் சிரமப்பட்டனர்.