உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்; உள்ளாட்சித் துறை கடும் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்; உள்ளாட்சித் துறை கடும் எச்சரிக்கை

புதுச்சேரி : பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதத்தோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சிரமங்களை போக்கவும், அழகை பராமரிக்கவும் வேண்டி உள்ளாட்சித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுபவர்கள் பழைய கட்டட கழிவுகளை சாலை ஓரங்களில் தேக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே கட்டட கழிவுகள், பழைய கட்டுமான பொருட்களை சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.சாலை ஓரங்களில் ஓட்டல்களை வைத்திருப்போர் உணவுக்கழிவுகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும் அல்லது குப்பை அகற்றும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தவறுவோர் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின் படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் .பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்கள் மற்றும் கொட்டும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை அபராதமும், கட்டுமான பொருட்கள் அல்லது கழிவுகளை வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன் அல்லது பொதுவெளியில் கொட்டுப்பவர்கள் மீது 3000 ரூபாய் அபராதமும் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்து முக்கிய வீதிகளிலும் இருக்கும் சி.சி.டி.வி., மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு 133 குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ