| ADDED : ஜூலை 27, 2024 04:55 AM
பாகூர்: புதுச்சேரி எல்லையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். புதுச்சேரியில் பெருகி வரும் சாலை விபத்து இறப்பை தவிர்க்க, பைக்கில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதன்பேரில், வாகன தனிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார், பைக்கில் ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடையில் நேற்று கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், ராஜசேகர் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் சென்ற பைக் ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அதே நேரம், ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து போலீசார் இனிப்புகள் வழங்கி பாராட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர். ஏட்டுகள் கார்த்திகேயன், அய்யனார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.