மின்துறையை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூ., செயலாளர் சலீம் அறிவிப்பு
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை கண்டித்து வரும், 2ம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு, யூனிட் வாரியாக எவ்வளவு கட்டணம் என்பதை விரிவாக மின்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து, ஒன்றரை மடங்கு கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சட்டசபை கூட்டத்தில், மின்துறை தனியார் மயம் ஆகாது என்று சபாநாயகர் செல்வம் கூறினார். மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயமும் கூறினார். ஆனால், கூட்டத்தொடர் முடிந்து சில நாட்களிலேயே, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, மின்துறையை தனியார்மயமாக்க கூடாது என வலியுறுத்தி வரும், 2,ம் தேதி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இடதுசாரிகள், வி.சி., சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார். இந்திய கம்யூ., துணை செயலாளர் சேது செல்வம், மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன், எம்.எல். கம்யூ., முருகன் உடனிருந்தனர்.
விரைவில் 'பந்த்'
'மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி 'பந்த்' போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழா வர இருக்கும் காரணத்தினால், அதற்கு பிறகு எந்த தேதியில் பந்த் நடத்துவது என்று அறிவிக்கப்படும்' என, சலீம் தெரிவித்தார்.