உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு கூடுதல் நிதி உதவி தேவை: மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை

புதுச்சேரிக்கு கூடுதல் நிதி உதவி தேவை: மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை

புதுச்சேரி:புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை துரிதமாக செயல்படுத்த, கூடுதல் நிதி தேவைப்படுவதாக, மத்திய நிதியமைச்சரிடம், முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.டில்லியில் மத்திய பட்ஜெட் தொடர்பாக, நிதி அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கினார். இதில் புதுச்சேரி அரசு சார்பில், அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்றார்.அவர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து, 2024-25ம் ஆண்டுக்கான, மத்திய யூனியன் பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி அளிக்குமாறு முதல்வர் ரங்கசாமி, அளித்த கடிதத்தை வழங்கினார். கடிதத்தில், மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் நிதியை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது, புதுச்சேரி அரசின் கோரிக்கை. எனினும், 2024-25ம் ஆண்டிற்கான, இடைக்கால வரவு செலவு திட்டத்தில், புதுச்சேரி அரசிற்கு நிதி உதவியை, 4.85 விழுக்காடு அளவிற்கே உயர்த்தி வழங்கி உள்ளது.புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் மூலதன உள் கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்கு, 'மாநிலங்களுக்கு மூலதன முதலீடுகளுக்காக நிதி உதவி அளித்தல்' என்ற இந்திய அரசின், 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு இந்த அரசு பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.இருப்பினும், இந்த திட்டம் யூனியன் பிரதேசங்களுக்கு உரித்தானது அல்ல என்று கூறி கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, நமது மாநிலத்தின் மூலதன செலவினமானது, 1 சதவீதத்தில் இருந்து 3-4 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனை மேலும் உயர்த்தும் விதமாக, விமான நிலைய விரிவாக்கம், ஒருங்கிணைந்த சட்ட சபை வளாக கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள தேவைப்படும் கூடுதல் மூலதன நிதியை புதுச்சேரியின் மூலதன ஒதுக்கீடுகளின் கீழ் வழங்க வேண்டும்.புதுச்சேரி யூனியன் பிரதேசம், இந்திய அரசிடம் இணைந்ததற்கான, 70வது ஆண்டு விடுதலை நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில், புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை துரிதமாக செயல்படுத்த மத்திய அரசின் கூடுதல் நிதி தேவைப்படுகிறது.முந்தைய பட்ஜெட் கூட்டத்தில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு வேண்டிய நிதி தேவைகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம். புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி ஆதரவை பெறும் என்பதை முழு மனதுடன் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை