| ADDED : ஜூலை 27, 2024 04:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் 13,600 கோடி ரூபாயில் மாதிரி பட்ஜெட்டினை வெளியிட்டுள்ளது.புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாதிரி பட்ஜெட்டை கட்சி தலைவர் ராமதாஸ் இதனை தயாரித்துள்ளார். இதன் வெளியிட்டு விழா தமிழ்சங்கத்தில் நேற்று நடந்தது. பொது செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். கட்சி தலைவர் ராமதாஸ் வெளியிட, சேர்மன் வெங்கட்டராமன் பெற்றுக் கொண்டார்.பின் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியதாவது:புதுச்சேரி அரசு தீர்மானித்துள்ள பட்ஜெட்டான 12,700 கோடி ரூபாய் விட 900 கோடி ரூபாய் அதிகமாக நிதி தேவைப்படுகிறது. எனவே 13,600 கோடியில் இந்த மாதிரி பட்ஜெட்டினை வெளியிட்டுள்ளோம். கடந்த 62 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. இத்தனை ஆண்டுகளாக மாநில வளர்ச்சியை மட்டுமே முன் வைத்து முழுக்க முழுக்க அரசியல் கலப்பில்லாத பொருளாதார ரீதியான மாதிரி பட்ஜெட்டினை எந்த ஆட்சியாளர்களும் கட்சிகளும் வழங்கவில்லை. அதன் காரணமாக புதுச்சேரி மாநிலம் துவக்க காலத்தில் இருந்ததைவிட பொருளாதார ரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு சீரழிந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 16 லட்சம் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மனதில் கொண்டு மாதிரி பட்ஜெட்டினை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில துணை தலைவர் ஆனந்தன், பொருளாளர் செல்வகுமாரி, செயலாளர்கள் பரந்தாமன், ரவிகுமார், சிவகுமாரன், இணை செயலாளர் சுப்ரமணி ,உதவி செயலாளர் ஆண்டாள், கருணாநிதி , மீனவர் அணி தலைவர் சந்திரன், மகளிர் அணி தலைவர் விமலா பெரியாண்டி, மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.