| ADDED : ஆக 07, 2024 06:17 AM
காரைக்கால், திருநள்ளார் நளன் குளம் அருகே விற்பனை செய்யப்பட்ட தரமற்ற பரிகார உணவு பொட்டலங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். அப்போது, அதிகாரிகளுடன் பெண் வியாபாரி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.காரைக்கால், திருநள்ளாறு சனி பகவான் கோவில் பிரசத்தி பெற்றது. சனி கிரக பரிகார ஸ்தலம் என்பதால், புதுச்சேரி தமிழகம் மட்டும் இன்றி பல மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகின்றனர். பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, விநாயகரை வழிப்பட்டு, ஏழை எளிய மற்றும் யாகம் கேட்போருக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். பக்தர்களின் பரிகாரத்திற்காக நளன் குளம் மற்றும் கோவில் சுற்றி ஏராளமான இடங்களில் அன்னதானம் செய்வதற்காக சிறிய உணவு பொட்டலங்கள் விற்பனை செய்கின்றனர். பக்தர்கள் உணவு பொட்டலங்களை வாங்கி யாசகம் கேட்போருக்கு அளிப்பர். அந்த பொட்டலங்களை அங்கு கடை வைத்திருக்கும் நபர்கள் குறைந்த விலைக்கு மீண்டும் வாங்கி, மீண்டும் பக்தர்களுக்கே விற்பனை செய்கின்றனர்.நளன் குளத்தை சுற்றி அடிக்கடி வியாபாரிகளுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதனால், நளன் குளத்தை சுற்றி பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்ய கூடாது என, மாவட்ட கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.தடையை மீறி நளன் குளம் அருகில் தரமற்ற உணவு பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் சென்றது. கடந்த சனிக்கிழமை 3ம் தேதி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் போலீசாருடன், நளன் குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நளன் குளம் சுற்றி தடை செய்யப்பட்ட பகுதியில் தரமற்ற பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த 8 பேரிடம் இருந்து எள், தயிர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். அப்போது, பரிகார உணவு பொட்டலம் விற்பனை செய்த பெண், உணவு பாதுகாப்பு அதிகாரியுடன் கடும் வாக்குவாதம் செய்தார். போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், 'திருநள்ளார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமற்ற பரிகார உணவுகள் விற்பதாக சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து புகார்கள் வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் தரமற்ற உணவு பொட்டலங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதனை மீண்டும் மறுசுழற்சி முறையில் யாசகம் கேட்போரிடம் பொட்டலங்களை வாங்கி மீண்டும் பக்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இது தொடர்பாக 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார்.