| ADDED : மே 16, 2024 10:58 PM
புதுச்சேரி: லெனின் வீதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை, கழிவு நீர் மேம்பாட்டு பணிகளால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குயவர்பாளையம் லெனின் வீதியில் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அமைந்துள்ளன. மருத்துவமனைகள், பள்ளிகள், ஓட்டல்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் இருக்கின்றன.எப்போதும் பிசியாக இருக்கும் லெனின் வீதியில் பாதாள சாக்கடை, கழிவுநீர் வாய்க்கால், சாலைப் பணிக்காக ரூ.3 கோடியில் டெண்டர் விடப்பட்டு கடந்தாண்டு டிசம்பரில் பணி துவங்கியது.முதல்கட்டமாக, சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால்களை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. அதன்பிறகு, புதிதாக கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டப்பட்டு, அதன் மீது கான்கிரீட் சிமெண்ட் சிலாப் போடப்பட்டு வருகிறது. 6 மாதங்கள் முடிந்த நிலையிலும்இப்பணிகள்ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மந்தமான பணியால், இந்த வீதியில் உள்ள கடைகளில் வியாபாரமும் முடங்கிபோய் உள்ளது.மேலும்,சாரம் காமராஜர் சாலையையும், திருவள்ளுவர் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக லெனின் வீதி இருக்கிறது. புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல பலரும் லெனின் வீதியை பயன்படுத்துகின்றனர்.அதேபோல், இப்பகுதியில் உள்ள பல்வேறு நகர்களில் வசிக்கும் மக்களுக்கும் லெனின் வீதி முக்கியமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது பலமாதமாக ஆமைவேகத்தில் பணிகளை மேற்கொண்டு வருவது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.சாலை, கழிவு நீர் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.