உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவில் இடத்தை மீட்டுத்தரக்கோரி பெண்கள் சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நெட்டப்பாக்கம்: கல்மண்டபத்தில் முத்துமாரியம்மன் கோவில் இடத்தினை மீட்டுத்தரக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.நெட்டப்பாக்கம் தொகுதி, கல்மண்டபம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஆயிரம் சதுர அடி இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சொந்தம் கொண்டாடி, நேற்று முன்தினம் அப்பகுதியில் செம்மண் கிராவல் கொட்டி விற்பதற்கு ஏற்பாடு செய்தார். இதைனை கண்டித்து, கல்மண்டபம் காலனி பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தவளக்குப்பம் - மடுகரை சாலையில் காலை 6:30 மணிக்கு மறியலில் ஈடுப்பட்டனர். சாலையின் நடுவில் செங்கல் நட்டு சாமி வழிபாடு செய்து, போராட்டம் நடத்தினர்.தகவலறிந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், சந்திரசேகரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கடந்த 60 ஆண்டுகளாக கோவிலுக்கு சொந்தமான இடத்தினை ஒருவர் உரிமம் கொண்டாடி வருகிறார். இந்த இடத்தினை கோவிலுக்கு சொந்தமாக்க முதல்வர், கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் மொபைல் போனில் பேசி சமாதானம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.இந்த மறியலால் தவளக்குப்பம் - மடுகரை சாலையில் 4:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ