| ADDED : ஜூன் 23, 2024 05:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் 7.11 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கருவடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மேட்ரிமோனியில் பெண் தேடினார். அவரிடம் பெண் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் பேசினார். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, மணிகண்டன் 5.23 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்தவர் கைலாஷ். இவரிடம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 63 ஆயிரம் பணத்தை முதலீடு செய்து, ஏமாந்தார்.அரியாங்குப்பத்தை சேர்ந்த வில்லியம் என்பவரின் கிரிடிட் கார்டு மூலம் 27 ஆயிரம் ரூபாய் அவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டையை சேர்ந்த யமுனா ராணியிடம், சி.பி.ஐ., அதிகாரி போல் பேசிய நபர், உங்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், வங்கி கணக்கு, ஆதார் முடக்கப்பட்டது. அவற்றை நீக்க வேண்டும் என்றால் பணம் அனுப்ப வேண்டும் என, கூறினார். அதற்கு பயந்து அவர் ரூ.23 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.அதே போல், வாலிபர் ஒருவரிடம் மொபைல் போனில் பேசிய நபர், வங்கி கே.ஒய்.சி., புதுப்பிக்க வேண்டும். வங்கி விபரங்கள், அதனுடன் ஓ.டி.பி., எண்ணை கொடுத்தார். அடுத்த நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.