| ADDED : ஏப் 08, 2024 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது;புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுதரப்படும். மாநில கவர்னர்களின் அதிகாரம் குறைக்கப்படும்.ஆர்.எஸ்.எஸ்.,பிடியில் சிக்கியுள்ள ஆரோவில், அரவிந்தர், அன்னை கனவுப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் உள்ள புதிய கல்வி கொள்கை முற்றிலும் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம் கொண்டுவரப்படும். வேலைவாய்ப்பில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தொடருவதற்கு வழிகாணப்படும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பெறப்படும்.புதுச்சேரி போக்குவரத்து நெரிசலை போக்க இந்திரா, ராஜிவ், சிவாஜி, மரப்பாலம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் மத்திய போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து மேம்பாலங்கள் கட்டப்படும். புதுச்சேரி அரசு வேலைவாய்ப்புகளை நடத்த தனியாக தேர்வு ஆணையம் கொண்டு வரப்படும். தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட துறைமுகம் மீண்டும் புதுச்சேரி அரசின் கட்டுபாட்டிற்கு கொண்டுவரப்படும்.புதுச்சேரி காரைக்கால் விவசாயிகளுக்கு பழைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்.ஆர் காங்., - பா.ஜ.,அரசால் மூடப்பட்டுள்ள கடந்த 1980-83ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நிறுவப்பட்ட லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருபுவனை கூட்டுறவு நுாற்பாலைகள் நவீனப்படுத்தி திறக்கப்படும்.பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த ஏ.எப்.டி.,சுதேசி, பாரதி மில்களை திறந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம்.மத்திய அரசினால் திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட மாமல்லபுரம்-புதுச்சேரி ரயில்பாதை திட்டம், திண்டிவனம்-புதுச்சேரி-கடலுார் ரயில் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். காரைக்கால்-பேரளம் அகல ரயில்பாதை திட்டம் விரைந்து முடித்து, மும்பை, எர்ணாகுளம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு ரயில் சேவை துவங்கப்படும். புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறந்து பொதுவிநியோக திட்டம் செயல்படுத்தப்படும்.