| ADDED : ஜூன் 02, 2024 05:03 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து போலி மதுபானம் தயாரிப்பதாக அ.தி.மு.க. அன்பழகன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது;கடந்த ஓராண்டிற்கு முன், தமிழகத்தில் போலி மதுபானம் குடித்து 20 பேர் இறந்தனர். அந்த விஷ சாராயத்தை வில்லியனுார் தி.மு.க., பிரமுகர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. தமிழக பிரமுகர்கள், புதுச்சேரி அரசியல் பிரமுகர்களுடன் கைகோர்த்து போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.இந்த போலி மதுபானம், தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது. 2 நாட்களுக்கு முன், உளுந்துார்பேட்டையில் போலி மதுபானங்கள் பிடித்ததுடன், அதனை தயாரித்த வில்லியனுாரைச் சேர்ந்த 5 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர். போலி மதுபானம் தயாரித்த இடத்தில் இயந்திரங்கள், ஆலோகிராம் ஸ்டிக்கர், டாஸ்மாக் கடை சரக்குகள் லேபிள்களை பறிமுதல் செய்தனர். இங்குள்ள போலீஸ், கலால் துறையால் இதனை கண்டுபிடிக்கவில்லை.புதுச்சேரி முழுதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதுடன், தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஒரு ரூபாய் கூட கலால் வரி, விற்பனை வரி கிடைப்பது இல்லை. எனவே, புதுச்சேரியில் போலி மது விற்பனை மற்றும் கடத்தல்களை கண்டறிய கவர்னர் மற்றும் முதல்வர் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்' என்றார்.