டேங்கர் லாரி சிறை பிடிப்பு ஆரோவில் அருகே பரபரப்பு
வானுார் : ஆரோவில் அருகே நிலத்தடி நீரை உறிஞ்சிய மினரல் வாட்டர் தொழிற்சாலையின் டேங்கர் லாரியை பொது மக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மயிலம் ரோட்டில் ரம்யா மினரல் வாட்டர் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான டேங்கர் லாரி, நேற்று பூத்துறை ஊராட்சிக்குட்பட்ட புதுச்சேரி - மேட்டுப்பாளையம் சாலையில் பைல் மூலம், நிலத்தடிநீரை ஏற்றிக் கொண்டிருந்தது.அதனை அறிந்த பூத்துறை கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், திரண்டு குடிநீரை உறிஞ்சுவதால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறி டேங்கர் லாரியை சிறைபிடித்தனர்.ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விசரணை நடத்தினர். அதில், ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், டேங்கர் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்திருப்பதும், தற்போது, மீண்டும் அதே பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பொது மக்கள் லாரியை சிறைபிடித்ததும் தெரியவந்தது.டேங்கர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டூரை சேர்ந்த வேல்முருகன், 41; மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.