| ADDED : ஜூன் 09, 2024 02:23 AM
கள்ளக்குறிச்சி : மனைவியை தாக்கி கொலை செய்து புதைத்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் ஏரியில் உள்ள மரத்தில் ஆண் உடல் துாக்கில் கிடப்பதாக கீழ்குப்பம் போலீசாருக்கு நேற்று மாலை 5:30 மணிக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., தேவராஜ், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்,அதில், துாக்கில் இறந்து கிடந்தவர் கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த லட்சுமணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல், 33;பொக்லைன் ஆப்ரேட்டர் என்பதும், அவர் துாக்கில் தொங்கிய இடத்தின் அருகே அவுரது மனைவி சுவேதாவை புதைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரணையில் சக்திவேல், தனது உறவினரான ம.புடையூர் கிராமத்தை சேர்ந்த சுவேதா, 20; என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்டு, கண்டாச்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.குழந்தை இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சக்திவேல், சுவேதாவை தாக்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில் சக்திவேல் தனது உறவினர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு, சுவேதா இறந்து விட்டதாகவும், அவரை புதைத்து விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்து விட்டு துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.