| ADDED : ஜூலை 28, 2024 05:58 AM
கொம்பாக்கத்தில் ரூ.1 கோடி செலவில் சமீபத்தில் கட்டப்பட்ட வீரன் குளத்தின் கம்பியாலான தடுப்பு வேலி (இரும்பு கிரீல்), சூறைக்காற்றில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.கொம்பாக்கம் கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில், வீரன்குளத்தை துார் வாரி நடைபாதையுடன் புனரமைக்கும் பணி நடந்தது.துார் வாரி கரைகளை பலப்படுத்தி, படித்துறை, குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பட்டது. இருக்கைகள், சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டது. அதற்கு பக்கத்தில், பாதுகாப்புக்காக, கம்பியாலான தடுப்பு வேலியும் (இரும்பு கிரீல்) அமைக்கப்பட்டது.சில மாதத்திற்கு முன், புனரமைக்கப்பட்ட வீரன் குளத்தின் சுவர்களில் விரிசல் மற்றும் குளத்தின் வடி கால் வாய்க்கால் கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இருந்தபோதும், கட்டுமான பணிகள் முழுதும் முடிந்து குளம் பயன்பாட்டிற்கு வந்தது.இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் வீசிய லேசான சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், குளத்தின் தெற்கு பக்கத்தில் இரும்பு கிரீல் இடிந்து விழுந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.