உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதி பூங்காவில் 50 ஆண்டுகள் பழமையான செயற்கை நீரூற்று; சொந்த செலவில் புனரமைக்கிறது தேசிய கட்டுமான கழகம்

பாரதி பூங்காவில் 50 ஆண்டுகள் பழமையான செயற்கை நீரூற்று; சொந்த செலவில் புனரமைக்கிறது தேசிய கட்டுமான கழகம்

புதுச்சேரி பாரதி பூங்காவில் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த செயற்கை நீரூற்று குளத்தினை சொந்த செலவில் புதுப்பித்து தருகிறது தேசிய கட்டுமான கழகம்.புதுச்சேரி சட்டசபை மற்றும் கவர்னர் மாளிகை எதிரில் உள்ள பாரதி பூங்கா மூன்று ஏக்கர் பரப்பளவில், 500க்கும் மேற்பட்ட மரங்களுடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.1770ம் ஆண்டுகளில், பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பேரரசராக நெப்போலியன் இருந்தபோது, ஆட்சியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி கடற்கரையில் துறைமுகம், கலங்கரை விளக்கம் மற்றும் பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை கட்டினர்.புதுச்சேரி நகரத்திற்கு நீர் தேக்கத்தை கட்டுவதற்காக தனது சொந்த வீட்டை இடித்த ஆயி என்ற பெண் தாசியின் நினைவாக இந்த ஆயி மண்டபத்திற்கு பெயரிடப்பட்டது. இந்த பூங்கா 1940 வரை பிரெஞ்சு போலீசாரின் அணிவகுப்பு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.புதுச்சேரி அரசு 1954க்கு பிறகு இப்பகுதியை முழுமையாக பூங்காவாக மாற்றியது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பூங்காவின் உட்பகுதியில் 20 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் கொண்ட குளம் மற்றும் 5 அடி உயரமுள்ள பெண் சிலை கையில் உள்ள குடத்தில் இருந்து நீர் கொட்டும் வகையில் செயற்கை நீரூற்று குளம் ஒன்று பூங்காவிற்கு வருபவர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டது.பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த செயற்கை நீரூற்று போதிய பராமரிப்பின்றி பொலிவிழந்து சிதிலமடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் செய்து வரும் தேசிய கட்டுமான கழகத்திடம் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் நீரூற்றை புதுப்பித்து தர கோரியதையடுத்து, தேசிய கட்டுமான கழகம் தனது சொந்த செலவில் செயற்கை நீரூற்றுப் பூங்காவை முழுமையாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இதற்காக குளத்தில் நவீன 'டைல்ஸ்'கள் பதிக்கப்பட்டு, வண்ண விளக்குகள் நீரூற்றின் போது ஒளி வீசும் வகையில் பொருத்தப்பட்டு வருகிறது. விரைவில் குளம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்