| ADDED : ஜூலை 21, 2024 06:11 AM
பு துச்சேரியில் வலுவாக கால் தடம் பதித்த பிரெஞ்சுக்காரர்கள் பல்வேறு ஊர்களுக்கு வணிகத்தை அதிகரிக்க முற்பட்டனர். சரக்கு பரிமாற்றத்திற்கு ரயில் போக்குவரத்து சேவை முக்கியமானதாக இருந்தது. எனவே புதுச்சேரியில் இருந்து சரக்கு ரயில் வண்டியை ஆரம்பிக்கலாம் என, முடிவு செய்து, அதற்கான தொழில்நுட்பத்திற்காக ஆங்கிலேயர்களை அணுகினர். ஆனால் ஆங்கிலேயேர்கள் நேரடியாக அமைத்து தர ஒத்துழைக்கவில்லை.இருப்பினும் புதுச்சேரியில் ரயில்வே நிறுவனம், பிரிட்டீஸ் பார்லிமெண்ட் சட்டத்தின்படி உருவாக்கி, அதன் வழியாக இருப்பு பாதைகள் அமைக்க ஒத்துழைத்தனர். தொடர்ந்து கடந்த 1878 மே மாதம் 8ம் தேதி புதுச்சேரி ரயில்வே நிலையத்திற்கு பிரெஞ்சு அரசுக்கும் இடையே பாரீசில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி புதுச்சேரி ரயில்வே நிறுவனத்திற்கு இருப்பு பாதைகள் போடுவதற்கு 1,264,375 பிரான்கள் நிதி ஒதுக்கி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மொத்த வருமானத்தில் பராமரிப்பு செலவு போக உள்ள தொகையில் பாதி பிரெஞ்சு அரசுக்கு தர வேண்டும் என, 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு விறுவிறுவென பணிகள் நடந்தது.அதை தொடர்ந்து, 1879 டிசம்பர் 14ம் தேதி முதல் ரயில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை வெள்ளோட்டமாக ஓடியது. மறுநாள் டிசம்பர் 15ம் தேதி விழுப்புரம் - புதுச்சேரிக்கு ரயில் சேவை அதிகாரபூர்வமாக துவங்கியது. அதில், முதல் பயணியாக வந்து இறங்கிய பெருமை பெற்றவர் இங்கிலாந்து நாட்டின் பக்கிம்காம் இளவரசர்.அதிகாரிகள் புடை சூழ அவர் ரயில் நிலையத்தினை வந்து இறங்கியதும், அவரை ரயில் நிலையத்தில் அப்போதைய பிரெஞ்சு கவர்னர் லெயோன்ஸ் லொழியே நேரில் வரவேற்றார்.இளவரசர் ரயிலை விட்டு இறங்கியதும், 21 பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் அணிவகுத்து வரவேற்றனர். அதுமட்டுமல்ல ரயில் நிலைய வரவேற்பு முடிந்தும் கூட இளவரசரும், கவர்னரும் சாரட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட தெருக்கள் வழியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, ராஜ்நிவாஸ்யை அடைந்தனர்.வழிநெடுக்கிலும் நகர மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். ரயில் ஓடிய அன்று நகரமே விழாகோலம் பூண்டு கொண்டாடியது. அதன் பிறகு காந்தி சிலை வரை ரயில்பாதை நீட்டிக்கப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதியில் முக்கிய பங்காற்றியுள்ளது.