உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூன்று மாடுகள் மர்ம சாவு கால்நடை வளர்ப்போர் அச்சம்

மூன்று மாடுகள் மர்ம சாவு கால்நடை வளர்ப்போர் அச்சம்

பாகூர், : கிருமாம்பாக்கம் அருகே மர்மமான முறையில் 3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் கால்நடை வளர்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அவ்வப்போது மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன.பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பாலமுருகன் 50; தண்டபாணி 55, ஆகியோரது மாடுகள் நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்றன. மாலை வெகுநேரம் ஆகியும் மாடுகள் வீட்டிற்கு வராததால், பாலமுருகன், தண்டபாணி இருவரும் மாடுகளை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை பிள்ளையார்குப்பத்தில் உள்ள பேப்பர் மில் சாலையின் தெற்கு பகுதியில் பாலமுருகனுக்கு சொந்தமான சினை மடு ஒன்றும், கறவை மாடு ஒன்றும், தண்டபாணியின் சினை மாடு ஒன்றும் வாய், மூக்கு, ஆசனவாயில் ரத்தம் வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.தகவலறிந்த கால்நடை மருத்துவர் சம்பத்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். முதற்கட்ட ஆய்வில், மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என, தெரிய வந்தது.ரத்தம், நுரையீரல், உள்ளிட்ட உறுப்புகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். எனினும், உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே உண்மை காரணம் தெரியவரும். இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 3 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி கால்நடை வளர்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை