வேலை வாங்கி தருவதாக ரூ. 9.75 லட்சம் மோசடி
காரைக்கால் : திருநள்ளார், சேத்துாரை சேர்ந்தவர் ஈஸ்வரராஜ். கடந்த 2021ம் ஆண்டு தனது சகோதரரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப, காரைக்கால் காமராஜர் சாலையில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பும் அலுவலகம் நடத்திய திருவாரூர் செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன், 35; என்பவரை அணுகினார். அவர், குவைத் நாட்டில் வேலை உள்ளதாகவும், தெரிந்த நபர்களை அறிமுகம் செய்து வைத்தால் கமிஷன் தருவதாக கூறியுள்ளார்.அதன்பேரில், திருவெண்காடு ராஜகோபால், சீர்காழி சோமநாதன் கடலுார் உதயக்குமார், வெங்கடேசனிடம், மயிலாடுதுறை வினோத், அம்பகரத்துார் அல்பாரூக், காரைக்கால் ஹாஜா, சந்தோஷ்குமாரிடம், செம்பனார் கோவில் சரண்ராஜ் ஆகியோரிடம் ரூ. 9.75 லட்சம் பெற்று தமிழ்செல்வன் வங்கி கணக்கிற்கு கடந்த 2021 நவ., மாதம் அனுப்பினர். சில மாதம் கழித்து தமிழ்செல்வன் மாயமானார். புகாரின் பேரில், திருநள்ளார் போலீசார் தமிழ்செல்வன் மீது மோசடி வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.