உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி

அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் உழவர்கரை நகராட்சி அதிரடி

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில் அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு;உழவர்கரை நகராட்சியில் தொடர்ந்து அனுமதியின்றி, பாதுகாப்பற்ற முறையில் பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகிறது.இதனை நெறிபடுத்துவதற்கு உழவர்கரை நகராட்சி, விளம்பர துணை விதிகள்- 2024 வகுத்துள்ளது. விளம்பர பதாகைகள் வைக்க நகராட்சியில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கட்டடத்தின் ஸ்திரத் தன்மை, கட்டமைப்பு உறுதித்தன்மையை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் பெறப்பட்ட சான்றிதழ் அளிக்க வேண்டும். உரிய கட்டணம் செலுத்திய பிறகே, விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.தற்காலிக, குறுகிய கால விளம்பரம் செய்வதற்கு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே, அந்த விளம்பரங்கள் வைக்கப்பட வேண்டும். முன் அனுமதியின்றி, விளம்பர பதாகைகள் குறுகிய கால விளம்பர பேனர்கள் வைப்பதும், உரிய அளவை மீறி, தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பதாகைகள் வைக்கப்படுவதும் தண்டனைக்குரிய குற்றம். அனுமதியின்றி, தடை செய்யப்பட்ட பகுதிகளில், விளம்பரம் செய்தால், ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.வரைவு துணை விதிகளை, நகராட்சியின் இணையதளமான, https://oulmun.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள், விளம்பரதாரர்கள் உழவர்கரை நகராட்சியின் வரைவு விளம்பர துணை விதிகள், 2024ன் மீது ஆட்சேபனை இருந்தால், ஆணையர், உழவர்கரை நகராட்சி, ஜவகர் நகர், புதுச்சேரி என்ற முகவரியில் எழுத்து பூர்வமாகவோ, அல்லது www.om.nic.inமற்றும் www.py.gov.in, என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தற்போது கட்டடங்கள் மீது விளம்பர பதாகைகள் வைத்திருப்போர் இந்த வரைவு விதிகள் நடைமுறைக்கு வந்த, 15 தினங்களுக்குள் உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்து, நகராட்சியின் உரிமம் பெறப்பட வேண்டும்.அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரங்களை எடுக்கவும், அதற்கான செலவினங்களை பேனர், விளம்பரம் வைப்பவர்களிடம் வசூலிக்கவும், வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ