| ADDED : ஜூலை 25, 2024 05:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து தரமான அரிசி வழங்க வேண்டும் என, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:ஏழை மக்களுக்காக, மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் புதுச்சேரியில் மட்டும் மத்திய மாநில அரசுகள் இணைந்து ரேஷன் கடைகளை மூடிவிட்டு உணவுப் பொருட்களுக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.அந்த பணத்தை கொண்டு உணவு தானியங்கள் வாங்கி கொள்ள முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையான ரேஷன் கடைகளை திறந்து தரமான அரிசியை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை காங்., கட்சி சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.சில நாட்களுக்கு முன் கவர்னர் ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கும் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கியதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. எனவே, உடனே ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசியை வழங்க வேண்டும். இதேபோல் மத்திய அரசு வழங்கும் அரிசிக்கான பணத்திற்கு பதில், அரிசியாக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.