புதுச்சேரி : பெண்களை ஆபாசமாக பேசி ஆடியோ, வீடியோக்களை பதிவிட்ட பிரபல யுடியூபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், படந்தாள் கிராமத்தை சேர்ந்தவர் பி.கே. விஜய் என்கிற துர்க்கைராஜ், 37; யுடியூபரான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஈவிள் லவ் எடிஸ் மற்றும் ஈவிள் லவ் சாங்க்ஸ் என்ற பெயரில் இரண்டு யுடியூப் சேனல் நடத்தி வருகிறார்.புதுச்சேரியை சேர்ந்த 35 வயது பெண், யுடியூப் சேனல் துவங்குவது தொடர்பாக, துர்க்கைராஜிடம் பேசி, பழகி வந்துள்ளார். பின், துர்க்கைராஜிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டார்; பேசுவதையும் துண்டித்தார்.ஆத்திரமடைந்த துர்க்கைராஜ், இதற்கு முன் அப்பெண் பேசிய ஆடியோ, வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து, அவரது சேனலில் பதிவேற்றம் செய்தார்.அப்பெண் தவறான தொழில் செய்பவர் என்று தனது யுடியூப் சேனலில் லைவ்வாக பலமுறை பேசி உள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்தனர்.அவரது யுடியூப் சேனலை ஆராய்ந்ததில், துர்க்கைராஜ், இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை இதேபோல் இழிவுபடுத்தி பேசி வீடியோ, ஆடியோ பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.துர்க்கைராஜ் மதுரையில் தங்கி இருப்பதை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.நேற்று மதுரை விரைந்த போலீசார், துர்க்கைராஜை கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். துர்க்கைராஜின் இரண்டு யுடியூப் சேனல்களையும் முடக்கினர்.
தமிழக முதல்வருக்கு சவால்
தமிழக முதல்வரையும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, முடிந்தால் காவல்துறையை பயன்படுத்தி என்னை கைது செய்து பார் என்று துர்க்கைராஜ் சவால் விடும் விதமாக பேசிய வீடியோ பதிவு செய்ததும் அம்பலமாகி உள்ளது.