வாட்டர் பாட்டிலுக்கு ரூ. 1 கூடுதலாக வாங்கிய ரெஸ்டாரண்டிற்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் புதுச்சேரி நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுச்சேரி : புதுச்சேரியில் வாட்டர் பாட்டிலுக்கு 1 ரூபாய் கூடுதலாக வாங்கிய ரெஸ்டாரண்டிற்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுதர்சன். புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சாலையில் உள்ள ப்ராவிடன்ஸ் மால் 3வது மாடியில் உள்ள அரேபியா மந்தி ரெஸ்டாரண்டில் 1 லிட்டர் மினரல் வாட்டர் வாங்கினார்.மினரல் வாட்டர் பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலை ரூ. 20 குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ஜி.எஸ்.டி., ரூ. 1 என சேர்த்து மொத்தம் 21 ரூபாயை ரெஸ்டாரண்ட் நிர்வாகம் பெற்றது. ஜி.எஸ்.டி., தொகையை சேர்த்து தான் எம்.ஆர்.பி., விலை, தனியாக ஜி.எஸ்.டி., ஏன் வாங்குகிறீர்கள் என சுதர்சன் கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகம் சரியாக பதில் சொல்லாமலும், அந்த தவறை சரிசெய்யாமலும் இருந்ததால், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் அரேபியா மந்தி ரெஸ்டாரண்ட் முறையற்ற வர்த்தகம் செய்வதாகவும், அது மாதிரியான முறையற்ற வர்த்தகம் செய்வதை தடை செய்யவும், நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில், அரேபியா மந்தி ரெஸ்டாரண்ட் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் மற்றும் சட்ட அளவியல் வழிகாட்டுதல்களை மீறி அனைத்து வரிகள் உட்பட அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள் மீது மேலும் ஜி.எஸ்.டி., பெற்றது முறையற்ற வர்த்தகம் என முடிவு செய்தது.மனுதாரர் வாங்கிய 1 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலுக்கு, ஜி.எஸ்.டி., ஆக பெற்ற ரூ. 1 திருப்பி அளிக்கவும், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுப்பட்டதிற்காக நஷ்ட ஈடாக ரூ. 10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ. 2,500 முறையீட்டாளருக்கு வழங்க ஆரேபியா மந்தி ஓட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது.இனி நுகர்வோர்களின் நலன் பாதிக்கும் இதுமாதிரியான முறையற்ற வணிகத்தில் ஈடுப்பட கூடாது என அரேபியா மத்தி ரெஸ்டாரண்ட்டிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.