புதுச்சேரி நகர பகுதி மற்றும் கிராமப்பகுதியில் வசிக்கும் 80 சதவீத மக்களின் எதிர்பார்ப்பு, தரமான சாலை, சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், வீட்டு வாசலில் கழிவுநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பது.மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வியாபாரத்திற்கு புதுச்சேரி நகர பகுதிக்குள் வருகின்றனர்.புதுச்சேரிக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளின் ஓரமும் வணிக நிறுவனங்கள் அமைந்து விட்டன. தனியார் இடத்தை கையகப்படுத்த வேண்டுமெனில் ஏராளமான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பதால், ஒரு அடி நிலத்தை கூட அரசால் வாங்க முடியாது.தற்போதுள்ள சாலையில் தான் அடுத்த தலைமுறையினர் வரை பயணிக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது. மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் சின்ன சின்ன பிரச்னைகள் மீது அரசு கவனம் செலுத்தாததால், ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசு மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது.முருங்கப்பாக்கம் சாலை, மூலக்குளம் - இந்திரா சிக்னல் சாலை, முதலியார்பேட்டை சாலை, வழுதாவூர் சாலை, முத்தியால்பேட்டை என மூன்று திசைகளிலும் உள்ள பிரதான சாலைகளில் காலை 6:00 மணி துவங்கி நள்ளிரவு 12:00 மணி வரை கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.இதற்கு காரணம் போக்குவரத்து போலீசார் அந்த சாலைகள் பக்கமே செல்லாதது. புதுச்சேரி நகரின் சுருங்கிய அனைத்து சாலை இரு புறத்திலும் லாரி, டாடா ஏஸ், பஸ், வேன்களை வரிசையாக நிறுத்தி சரக்குகளை இறக்குகின்றனர். இதனால் ஏற்படும் டிராபிக் ஜாமால், குறித்த நேரத்திற்கு எந்த இடத்திற்கு செல்ல முடிவ தில்லை.ஆம்புலன்ஸ்கள் கூட மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை புதுச்சேரியில் உள்ளது. இன்ஸ்பெக்டர்கள் இச்சாலைகளில் ரோந்து சென்று, வாகனங்களை அப்புறப்படுத்தினால் டிராபிக் பிரச்னை ஏற்படாது. இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலிலும், மக்கள் சைலன்ட்டாக அதிருப்தியை பதிவு செய்வர்.எனவே, முதல்வர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, போக்குவரத்து பிரச்னையை சரிசெய்ய தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த பிரிவு டிராபிக் ஏற்படும் 5 சாலைகளிலும் 24 மணி நேரமும் ரோந்து சென்று, போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது பாரபட்சமின்றி அபராதம் விதித்தால், ஓரிரு நாட்களில் இப்பிரச்னையை சரி செய்யலாம்.இதற்கு முதல்வர் உத்தரவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.