தெரு நாய் கடித்து 10 பேர் காயம் கோவிந்த சாலையில் பரபரப்பு
புதுச்சேரி: உருளையான்பேட்டையில் தெரு நாய் கடித்து சிறுவன் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, ஒத்தவடை வீதி, புதுத்தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவ்வழியாக பெரிய மார்க்கெட் பகுதிக்கு அதிகாலையில் விவசாயிகள், வியாபாரிகள் தினமும் செல்கின்றனர்.இங்கு 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகின்றன. நேற்று மாலை அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு வெறிப்பிடித்த தெருநாய்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், மூதாட்டி உள்ளிட்ட 10 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதனைபார்த்த பொதுமக்கள் நாயை விரட்டி விட்டு, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., அப்பகுதிக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவரிடம் இங்கு சுற்றித்திரியும் வெறிபிடித்த நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.உடனே நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெறிப்பிடித்த நாய்களை உடனடியாக பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதையடுத்து நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் திருமுருகன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெறிபிடித்த தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.