உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன: கவர்னர் பேச்சு

10 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன: கவர்னர் பேச்சு

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டியில் 10 பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார். புதுச்சேரி மின்சார பஸ் திட்டத்தை துவக்கி வைத்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: பெஸ்ட் புதுச்சேரிக்கான ஒரு புதிய அத்தியாயம் இன்று துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர வளர்ச்சியின் நவீனத்தை நோக்கி - அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். இது சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் எடுக்கும் நடவடிக்கை. நம்முடைய குழந்தைகளுக்கு, எதிர்கால தலைமுறைக்கு, ஒரு சுத்தமான, பாதுகாப்பான நகரை ஒப்படைக்க நாம் எடுக்கும் ஒரு முயற்சி. ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ. 620 கோடி மதிப்பிலான 82 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. அதில் 50 சதவீதம் அதாவது ரூ. 310 கோடி மத்திய அரசின் பங்கு. அந்த 310 கோடியும் தரப்பட்டு விட்டது. அதில் இதுவரை 72 பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 10 பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போது துவங்கப்பட்டுள்ள மின்சார பஸ்கள் உள்ளிட்ட திட்டங்கள் புதுச்சேரியை ஒரு பசுமை நகரமாக, அனைத்து நகரங்களுக்கு ரோல் மாடலாகவும் மாற்றி இருக்கின்றது. அனைத்து நிலைகளிலும் மத்திய அரசின் ஆதரவும் உதவியும் நமக்கு பெரும் துணையாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு பணியும் புதுச்சேரியின் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான முதலீடாக இருக்கும். அதற்காக பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கும், மத்திய நகர வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்திற்கும் புதுச்சேரி மக்கள் சார்பில் நன்றி. மின்சார போக்குவரத்தை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள். இந்த ஸ்மார்ட் சிட்டி வசதிகளை பொது சொத்தாக நினைத்து பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை தங்களுடையதாக ஏற்று, அதை பராமரித்து, ஒரு பசுமையான புதுச்சேரியை உருவாக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி