பைக் மீது கார் மோதி விபத்து 2 இளைஞர்கள் பரிதாப பலி
மயிலம் : மயிலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக இறந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சரண்ராஜ், 24; கிரேன் ஆபரேட்டர். நாகராஜ் மகன் ஜீவா, 24; கல்லுாரி இறுதி ஆண்டு படித்து வந்தார்.இருவரும் நேற்று இரவு 7:00 மணி அளவில் பைக்கில் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக சென்ட்ரல் மீடியன் பகுதியில் காத்திருந்தனர்.அப்போது சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், ஜீவாவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு 8:00 மணியவில் அனைவரையும் கலைந்து போக செய்தார்.விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.