மத்திய பல்கலையில் 25 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் ஏமாற்றம் உரிமையை நிலை நாட்ட அரசின் நடவடிக்கை தேவை
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு பெற்றுத் தர வேண்டும் என பெற்றோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 800 ஏக்கர் பரப்பளவில் 1985 ஆண்டு துவங்கப்பட்டது. பல்கலைக்கு நிலம் கொடுத்த புதுச்சேரி மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில், 25 சதவீத இடங்களை ஒதுக்க மாநில அரசு கேட்டுக்கொண்டது.பரிசீலித்த பல்கலை நிர்வாகம், புதுச்சேரியில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை வழங்க ஒப்புக் கொண்டு, 1997ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.அதன்படி, பல்கலையில் மொத்தமுள்ள 54 பாடப்பிரிவுகளில், 20 பாடப்பிரிவுகளில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மற்ற பாடப்பிரிவுகளில் இல்லை.குறிப்பாக, வேலைவாய்ப்பு அளிக்கும் மிக முக்கியமான பாடப்பிரிவுகளில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இட ஒதுக்கீடு பிரச்னை எழுவதும், பின்னர் அப்படியே அடங்கிவிடுகின்றது.இந்தாண்டு பல்கலையில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகதது, புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மாநிலத்தில் தனி பல்கலைக்கழகம் இல்லை. உயர்கல்விக்கு பெரிதும் புதுச்சேரி பல்கலையையே சார்ந்துள்ளது. ஆனால் 'கியூட்' தேர்விற்கு பிறகு புதுச்சேரி மாணவர்களுக்கு புதுச்சேரி பல்கலையில் இடம் கிடைப்பது சிக்கலாகி வருகின்றது.துணை வேந்தராக இருந்த தரீன் உத்தரவுபடி, பல்கலை இயக்குனர் ராமதாஸ், பேராசிரியர்கள் சம்பந்தம், பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழு ஆராய்ந்து. அனைத்து படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரை செய்ததை இன்னும் அமல்படுத்தப்படவில்லை.புதுச்சேரி பல்கலையில் அனைத்து பாடப் பிரிவுகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை, புதுச்சேரி பல்கலை நிர்வாகமும், மத்திய கல்வி அமைச்சகமும் கண்டும் காணாமல் உள்ளது.சட்டசபையில் சில எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பினர். ஆனால், அரசு அதனை மவுனமாக கடந்து சென்று விட்டது. மத்தியிலும், புதுச்சேரி மாநிலத்திலும் ஒரே அரசு ஆட்சியில் உள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வரும் சட்டசபை கூட்ட தொடரில், 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.சட்டசபை கட்டுவது உட்பட பல காரணங்களுக்கு டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் அமைச்சர்கள், புதுச்சேரி மாணவர்கள் நலனுக்காக, பல்கலையில் இடஒதுக்கீடு பெற மத்திய அமைச்சர்களை சந்தித்து இந்த கல்வியாண்டிலே அதனை பெற்று தர தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.