உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நகர பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த... 3 பேர் பலி; வாந்தி, பேதியுடன் 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

நகர பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த... 3 பேர் பலி; வாந்தி, பேதியுடன் 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதார துறை தீவிர சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், கடந்த 5ம் தேதி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் குடிநீரை குடித்த 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதேபகுதியில் நேற்றுமுன்தினம் மேலும் பலருக்கும் வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் கோவிந்தசாலை பகத்சிங் வீதி, பூசைமுத்து,43; காமராஜ் வீதி மூதாட்டி பார்வதி,65; பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி,70; ஆகியோர் இறந்தனர். -------------கடந்த மூன்று நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் 31 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குவிந்ததால் மருத்துவமனை வளாகம் நிரம்பி வழிந்தது. வயிற்று போக்கால் மூவர் இறந்த சம்பவத்தால் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பொதுமக்கள் கொந்தளிப்பு கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் கொந்தளிந்தனர். ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில நாட்கள் தண்ணீர் நன்றாக வருகிறது. அடுத்த சில நாட்கள் கழிவு நீர் கலந்து வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து, பல முறை நகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இன்று நடந்த உயிரிழப்பிற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என கொந்தளித்தனர். குடிநீர் ஆய்வு உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்திரப்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் கழிவு நீர் கலந்துள்ளதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று விடியற்காலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். குளோரின் அளவு அதிகரிப்பு பாதிக்கப்பட்ட பகுதியில் குளோரின் கலந்த குடிநீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குடிநீரில் 0.2 பி.பி.எம்., குளோரின் கலந்து வழங்கப்படும் நிலையில், தற்போது 0.4 பி.பி.எம்., ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற துாய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்விற்கு பிறகே தெரியும்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் குழாயை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டோம். கழிவு நீர் கலந்ததாக தெரியவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும். அதன்பிறகே, வாந்தி பேதிக்கான காரணம் தெரிய வரும். பொதுப்பணித் துறையின் பறக்கு படையினர் வீடு, வீடாக சென்று குடிநீர் துர்நாற்றத்துடன் வருகின்றதா என்றும், துர்நாற்றம் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

உடற்கூறாய்வு தான் சொல்லும்

சுகாதார துறை இயக்குநர் செவ்வேள் கூறுகையில், இறந்தவர்களது உடல்கள் உடற்கூறாய்வு செய்த பிறகே, இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது தெரிய வரும். மூவர் இறந்த கோவிந்த சாலையில், டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துாய்மை பணியாளருக்கு பாதிப்பு

கோவிந்த சாலை பகுதியில் துப்புரவு பணி மேற்கொண்டபோது, அங்கு குடிநீர் வாங்கி குடித்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த மூதாட்டி கஸ்துாரி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ