நீர் மேலாண்மையில் தேசிய அளவில் பொதுப்பணித் துறைக்கு 3ம் பரிசு
புதுச்சேரி: மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் தேசிய அளவில் சிறந்து விளங்கிய புதுச்சேரி மாநிலத்திற்கு மூன்றாம் பரிசை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.டில்லியில், கடந்த 22ம் தேதி,5வது தேசிய நீர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் தேசிய அளவில் நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் சிறந்து விளங்கியதற்காக புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் மூன்றாவது பரிசினை வழங்கியுள்ளது.இதையடுத்து புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் (நீர்பாசனக் கோட்டம்) ராதாகிருஷ்ணன், செயற்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைகள் கோட்டம்) பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று முன்தினம் சட்டசபையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் விருதை வழங்கி வாழ்த்துப் பெற்றனர். அப்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார்.