புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை 2 மணி நேரத்தில் 5.6 செ.மீ., பதிவு
புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரே நாளில் 5.6 செ.மீ., மழை கொட்டியது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை நகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்களை கொண்டு வெளியேற்றினர். புதுச்சேரியில் கோடைக்காலம் முடிந்த நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. பகலில் வெயில் சுட்டெறிக்கும் நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் அவ்வப்போது இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மதகடிப்பட்டு, திருக்கனுார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி நகர பகுதியில் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் விடியற்காலை 5 மணிவரை பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை வரை புதுச்சேரியில் 5.63 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை பெய்தது. இரண்டு மணி நேரத்தில் கொட்டிய கனமழை காரணமாக புதுச்சேரி ரெயின்போ நகர், செல்லான் நகர், மேரிஉழவர்கரை கணபதி நகர், இந்திரா சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சில பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றினர். லாஸ்பேட்டை ராஜாஜி நகரில் மரக்கிளைகள் முறிந்து விழுந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணி மற்றும் மின்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர்.