புதுச்சேரியில் ரவுடி கொலை தீர்த்துக்கட்டிய 6 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி, லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்தவர் ஜாக்கப் பால், 23; ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அக்., 23 இரவு லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில், நண்பரின் மகள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது, 5 பேர் கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த ஜாக்கப் பாலை, லாஸ்பேட்டை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த மே 31ல், காதல் தகராறில் பஞ்சாயத்து செய்த சண்முகாபுரம் பச்சையப்பன், 22, உள்ளிட்ட மூவரை ஜாக்கப் பால் வெட்டினார். இந்த முன்விரோதம் காரணமாக, பச்சையப்பனை கொலை செய்ய ஜாக்கப் பால், மிட்டாய் மணி என்பவரிடம் திட்டம் வகுத்து கொடுக்குமாறு கேட்டார். இந்த தகவலை மிட்டாய் மணி, பச்சையப்பனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த பச்சையப்பன், தன் ஆதர வாளர்களுடன் சேர்ந்து, ஜாக்கப் பாலை வெட்டியது தெரிய வந்தது. பச்சையப்பன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாக்கப் பால் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.