பாதாள சாக்கடை தொட்டி உடைந்து ரோட்டில் ஓடும் கழிவுநீர்
புதுச்சேரி: சாரம், பாலாஜி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் ரோட்டில் வெளியேறி வருவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சாரம், 40 அடி சாலை, பாலாஜி நகர் மெயின் ரோட்டில் பொதுப்பணித் துறை சார்பில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாதாள சாக்கடை தொட்டிகள் வீடுகளின் ஓரத்தில் உள்ளது. இந்த தொட்டிகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே உடைந்து சேதமானது. இதனால் பல வீடுகளின் கழிவுநீர் ரோட்டிலேயே வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும் உழவர்கரை நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும், அப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மற்றும் சைடு வாய்க்கால்கள் உடைந்து போய் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்காவிட்டால் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறைகளை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.