உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்தது

மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்தது

தொழிலதிபர், ரவுடிகள் உட்பட மூவர் படுகாயம் புதுச்சேரி : மாமூல் தர மறுத்த தொழிலதிபரை மிரட்ட எடுத்த நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததால் ரவுடி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தனர்.புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்,36; அதே பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரை 2 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரவுடி சுகன்,32; மாமூல் கேட்டு மிரட்டினார். வெங்கடேசன் மறுத்துவிட்டார்.ஆத்திரமடைந்த ரவுடி சுகன், தனது கூட்டாளியான சென்னையை சேர்ந்த ரவுடி சரத், 28; என்பவருடன், கத்தி, நாட்டு வெடிகுண்டுடன் நேற்று காலை 11:30 மணிக்கு வெங்கடேசனின் தொழிற்சாலைக்கு சென்றார். வாசலில் நின்றிருந்த வெங்கடேசனை,மாமூல் கேட்டால் தரமாட்டாயா எனக் கேட்டு சுகன் தாக்கினார். பின்னர், அருகில் நின்றிருந்த ரவுடி சரத்திடம் நாட்டு வெடிகுண்டை எடுக்குமுாறு கூறினார். அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது தவறி கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி, அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.அதில், தொழிலதிபர் வெங்கடேசன், ரவுடிகள் சுகன், சரத் ஆகியோர் காயமடைந்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் ரவுடிகள் இருவரும் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த வெங்கடேசனை, ஊழியர்கள் மீட்டு கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த எஸ்.பி., வம்சீதரெட்டி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடம் மற்றும் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் வெடிகுண்டு மாதிரிகள் சேகரித்தனர்.இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ரவுடி சரத் நாட்டு வெடிகுண்டை பாக்கெட்டில் இருந்த எடுக்கும்போது தவறி கீழே விழுந்து வெடிக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொழில் வளர்ச்சி: ரவுடிகளால் பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைக்கு அளித்து வந்த பல சலுகைகள் நிறுத்தப்பட்டு விட்டதால், தொழிலதிபர்கள் பெரும் சிரமத்திற்கு இடையே தொழிற்சாலையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரவுடிகள், மாமூல் கேட்டு வெடிகுண்டு வீசி மிரட்டுவது தொழிலதிபர்களை அச்சமடையச் செய்துள்ளது. இந்நிலை தொடந்தால், இருக்கின்ற தொழிற்சாலைகளும் மூடும் ஆபத்து உள்ளது. அரசு இனியேனும் ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

கொடி கட்டி பறக்கும் வெடிகுண்டு கலாசாரம்

வில்லியனுாரில் சில மாதங்களுக்கு முன் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். மங்கலம், வில்லியனுார் பகுதியில் ரவுடிகள் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வில்லியனுாரில் பணிக்கு வரும் போலீஸ் அதிகாரிகள், அங்குள்ள அரசியல் பின்பலம் கொண்ட ரவுடிகள் மீது மென்மையான போக்குடன் பழகுவதால், வெடிகுண்டு கலாசாரம் கொடிகட்டி பறக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை