உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் துறைமுகத்திற்கு புதிய ஒப்பந்தம் அ.தி.மு.க., மாநில செயலாளர் வலியுறுத்தல்

காரைக்கால் துறைமுகத்திற்கு புதிய ஒப்பந்தம் அ.தி.மு.க., மாநில செயலாளர் வலியுறுத்தல்

புதுச்சேரி: அரசின் வருவாயை பெருக்க காரைக்கால் துறைமுகத்திற்கு புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது;புதுச்சேரி அரசின் தற்போதைய மதுபான கொள்கையால், அரசுக்கு ரூ. 1000 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது ஆளும் கட்சியினரின் திட்டமிட்ட முறைகேடு ஆகும். காரைக்காலில், அரசு இடத்தில் செயல்படும் தனியார் துறைமுகத்தில் ஆண்டு வாடகையும், சலுகை கட்டணமும் மிக குறைந்த அளவில் வசூல் செய்வதால் ஆண்டிற்கு ரூ. 600 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது.காரைக்காலில் 598 ஏக்கர் அரசு நிலத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்தது.அப்போது, ஒரு ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக ஆண்டிற்கு ரூ. 9,000 எனவும், சலுகை கட்டணமாக மொத்த வருமானத்தில் 2.6 சதவீதம் நிறுவனம் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால், 598 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 52 லட்சமும், சலுகை கட்டணமாக ரூ. 11 கோடியும் என இதுவரை ரூ. 165 கோடி மட்டுமே புதுச்சேரி அரசுக்கு வந்துள்ளது.இந்த தனியார் துறைமுக உரிமையாளர், வருவாயை பல்வேறு திட்ட பணிகளில் மடைமாற்றம் செய்ததால், துறைமுகத்தை செயற்கையாக நஷ்டத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், நிறுவனத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தது.துறைமுகத்தை புதிதாக வாங்கிய உரிமையாளரிடம், அரசு கால சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் போடப்படாததால், புதுச்சேரி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு சேர வேண்டிய நியாயமான சலுகை கட்டணமும், அரசின் இடத்திற்கான வாடகை தொகையும் பெற புதிய ஒப்பந்தத்தை அரசு உடனடியாக போட வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 600 கோடி நேரடியாகவும், மத்திய அரசின் வரியில் இருந்து ஒரு கணிசமான தொகையும் கிடைக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை